சிதறல்கள் வலைப்பூவில் அண்மையில் எமது ஊரை கொச்சைப்படுத்தாதீர்கள் என்ற தலைப்பில் ஒரு பதிவு வந்திருந்தது. தேற்றாத்தீவு பிரதேச அரசியலில் முஸ்லிம் அரசியல்வாதிகளை ஓரம்கட்டும் நோக்கத்துடன் இப்பதிவு எழுதப்பட்டிருந்தது.
இனவாரியாகத்தான் தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யவேண்டும் என்ற வாதம் இப்பதிவு முழுவதும் விரவி நிற்கின்றது. சமகாலத்தில் சில பிரச்சினைகளை வேற்று மதத்தவர்கள் அணுகும் விதம் பிரச்சினையை முகம்கொடுப்பவர்கள் பிரச்சினையை நோக்கும் விதத்திலும் பாரியளவு வித்தியாசப்பட்டிருப்பதால் (உ-ம் வணக்கம்), இவ்வாறான கோரிக்கை நியாயமற்றதாக கொள்ளப்படமுடியாது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்துகள் இல்லை.
இருந்தபோதும் எந்தவொரு தேர்தலிலும் நம்மால் எமது "உதாரண புருஷ" பிரதிநிதிக்கு வாக்களிக்க முடிவதில்லை. எம்முன்னே இருக்கும் தெரிவுகளில் சாத்தியமான யதார்த்தமான தெரிவையே மேற்கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம். வெற்றி பெற வாய்ப்பே இல்லாத ஒரு சுயேட்சை "அப்பளுக்கற்ற அரசியலுக்காக" களம் இறங்கியிருக்கலாம். தலை சிறந்த பண்புகளை கொண்டவர்களாக அவர்களின் வேட்பாளர்கள் இருக்கலாம். இருந்தாலும் "சாத்தியமான" என்ற அம்சத்தை கருத்தில் கொண்டு நாம் வெல்லக்கூடிய ஒருவருக்கே வாக்களிக்க வேண்டும். வெல்லக்கூடியவர்களில் ஒப்பீட்டுரீதியில் அவ்வளவு கெட்டவன் இல்லாத ஒருவரே யதார்த்த தெரிவாகும்.
இவையெல்லாம் தாண்டி நான் குறிப்பிட்ட வலைப்பதிவில் தடித்த எழுத்துக்களில் ஒரு விடயம் இருக்கிறது.
கவனம் உறவுகளே! கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயம் "அல்லாவினால் கட்டப்படும்் கோயில் எண்டு பின்னர் வரலாறு எழுத்தப்படுமோ தெரியல்ல...
என்பதே அது. இதில் அல்லாவினால் என்ற சொற்பிரயோகம் முன்னர் ரசூலுல்லா என்றிருந்தது! இது தொடர்பாக எனது கண்டனத்தை பதிவு செய்தபின் அது அல்லாவினால் என்ற சொல்லினால் பிரதியீடு செய்யப்பட்டுள்ளது.
சொல் மாறியபோதும், அதன் தொனி மாறவில்லை என்பதே இதற்காக ஒரு பதிவு எழுதும் நிலைக்கு என்னை தள்ளியது. இன்னும் அவ்வசனம் தடித்த எழுத்துக்களில் இருப்பது பதிவரின் உண்மையான நோக்கத்தையும் வெட்ட வெளிச்சமாக்குகிறது.
முஸ்லிம்கள் அல்லாஹ் என்றே பிரயோகிப்பர் என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளக்கூடிய் விடயம். அல்லாஹ் என்ற சொல் கூட தெரியாத ஒரு நிலையில் இப்பதிவர் முஸ்லிம்களை பற்றி அறியாது ஒரு விஷம கருத்தை பதிவிட்டுள்ளார் என்பது இங்கு தெள்ளத்தெளிவாக நிரூபணம் ஆகிறது.
முஸ்லிம்கள் இந்துக்கோயில்களுக்கு உரிமை கூறியதாக ஆதாரம் எதுவுமில்லை. வேண்டுமானால் பாபரி மஸ்ஜித் போன்ற முஸ்லிம் பள்ளிவாசல் இடித்து கோவிலாக மாற்றப்பட்டிருக்கலாம். (பாபரி மஸ்ஜித் கோவிலை இடித்து கட்டப்பட்டது என்ற இந்துத்துவா வாதம் எவ்வித அடிப்படையும் அற்றது என்பதும் நிரூபணம் அற்றது என்பதும் முஸ்லிம் அல்லாதவர்களாலேயே தெளிவாக்கப்பட்டிருக்கிறது)மட்டக்களப்பு பிரதேசத்தில் இன முறுகல்கள் புதிய விடயம் இல்லாவிடினும் (காண்க ) இரு சமூகங்களும் ஒருவரை ஒருவர் பகைத்து வாழமுடியாது என்ற யதார்த்தம் பொதுமக்களால் நன்கு உணரப்பட்டுள்ளதால் பல பிரச்சினைகள் மத அமைப்புகளினூடாக பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் இவ்வலைப்பதிவு இப்பிரச்சினைகளுக்கெல்லாம் இதுவரை இருந்திராத புது பரிமாணம் கொடுக்க கூடும்.
அதேவேளை இவ்வாறான விஷயங்களில் சக பதிவர்கள் தலையிட்டு (குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்கள்) இவ்வாறான விஷமத்தனங்களை தடுக்காது இருப்பது மிகுந்த வேதனையையும் நம்பிக்கையீனத்தையும் சந்தேகத்தையும் தருகிறது.
நீங்கள் எல்லாம் சிதறல்கள் பதிவருக்கு சொல்ல வேண்டிய ஒரு விடயம்
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் அவசியமெனில், அதைபற்றி மட்டும் எழுதுங்கள். "அல்லாவினால் கட்டப்படும்் கோயில் எண்டு" என்றெல்லாம் விஷம பிரச்சாரம் வேண்டாம் என்பதே.
(ஒரு சிலர் என்னுடைய பதிவில் இடம்பெற்ற இனமுறுகல்களை சுட்டிக்காட்டிய பதிவுகளை காட்டி எதிர்வாதம் செய்யலாம். அவர்களுக்கு சொல்ல இருப்பது "நான் எழுதியிருப்பதெல்லாம் ஆதாரபூர்வமான, சமகால, ஆவணப்படுத்தப்பட்ட விடயங்கள் என்பதே)

EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.




0 comments:
Post a Comment