தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றன. சட்ட விரோத சுவரொட்டிகளையும் தேர்தல் அலுவலகங்களையும் அகற்றுமாறு தேர்தல் ஆணையாளர் சொல்வதையெல்லாம் சூடான செய்திகளுக்கு பஞ்சம் இருக்கும் ஊடகங்கள் தலைப்புச்செய்தியில் சொல்கின்றன.
இந்த சட்ட விரோத என்ற சொற்றொடரைத்தான் சட்டவிரோதமாக்கவேண்டும். இதெல்லாம் part and parcel of lifeஎன்பதுபோல் மக்களாலும் அவர்தம் பிரதிநிதிகளாகப்போகப்போகும் அரசியல்வாதிகளாலும் கருதப்படும் சந்தர்ப்பத்தில் சட்டவிரோதம் என்ற சொல்லுக்கு ஏதாவது அர்த்தம் இருக்க முடியுமா?
தெமட்டகொட குற்றத்தடுப்பு பிரிவிற்கு முன் (அருகருகே இரண்டு சோதனை சாவடி நிலையங்கள் வேறு) மக்களுக்கான நடைபாதையில் ஆளும் கட்சி வேட்பாளர் திலங்க சுமதிப்பாலவின் அலுவலகம் கற்களால் கட்டப்பட்டு நிரந்தர அலுவலகமாக காட்சி தருகிறது. மக்கள் நடைபாதையை விட்டு பாதையில் நடக்கிறார்கள். இந்த லட்சணத்தில் தூர இடங்களில் இருப்பவற்றையா அகற்றப்போகிறார்கள்?
(அந்த அலுவலகத்தை புகைப்படம் எடுத்து உங்களுக்கு காட்ட ஆசைதான். ஆனால் தேசதுரோக குற்றச்சாட்டில் கைதுசெய்து அல்கைதா தொடர்பிருக்கிறதா என்றெல்லாம் தேடவேண்டிய கஷ்டத்தை மிரிஹான பொலிஸுக்கு கொடுக்கும் விருப்பம் இல்லை.)
வெற்றிக்காக பலர் அடிபிடிப்படும் வேளையில், இந்த தேர்தலில் நிஜமான வெற்றி மஹிந்தவின் ராஜதந்திரத்திற்காக இருக்கும்.
இத்தேர்தலை ஜனாதிபதி அவர்கள் தன்து அரசுக்கு ஆதரவுவழங்கிக்கொண்டிருக்கும்;
- த்னக்கு தலையிடியாக இருந்துகொண்டிருக்கும் சில பாராளுமன்ற உறுப்பினர்களையும்
- தனிப்பட்ட ஆளுமைகளாக வளர்ந்து வரும் உறுப்பினர்களையும்
ஹெஜ்ஜிங் ஊழல் தொடர்பான விமரிசனங்கள் வந்தபோது ஜனாதிபதியின் கட்டளைகளையே தான் பின்பற்றியதாக உண்மைகளை போட்டுடைத்தவரும், முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியல் லாபங்களுக்காக பிளவுபடும்போதெல்லாம் சேர்த்து வைப்பவருமாக இருக்கும் பௌசி இத்தேர்தலில் பெருமளவு மௌனமாக்கப்பட்டுள்மையும்
அர்ஜுனவுடன் பிரச்சினைப்பட்டுக்கொண்டிருந்த லொக்கு பண்டாரவையும், விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றோரையும் விருப்பு வாக்குகளுக்காக சண்டையிடவேண்டிய நிலைக்கு தள்ளியிருப்பதும்
பைசர் முஸ்தபாவை ரவூப் ஹக்கீமுடன் மோதவிட்டிருப்பதும்
சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக சவூதி அரசாங்கத்தின் நிதியுதவில் தொடர்மாடித்தொகுதியை அமைத்த பேரியலை (இத்தொகுதி அரசின் பௌத்த தீவிரவாத கரமாக இயங்கும் சிஹல உறுமயவினால் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது) வீரசேகரவுடன் மோதவிட்டிருப்பதும்
முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையான திகாமடுல்லயில் முஸ்லிம் காங்கிரஸ் தெளிவான 3 தெரிவுகளோடு இருக்கும்போது, அரசு சார்பாக பல முஸ்லிம்களை (முக்கியமாக அமைச்சர்களை) சண்டையிடச்செய்திருப்பதும்
கிழக்கு மாகாண சபைத்தேர்தலின்பின் முதலமைச்சர் பதவி கேட்டு குழப்படி செய்த ஹிஸ்புல்லாவை வெல்லமுடியாத மட்டக்களப்பு களத்தில் இறக்கியிருப்பதும்
என்பன இத்தந்திரத்தை தெளிவாக்குகின்றது.
இன்னும் ராஜபக்ச 2/3 பெரும்பான்மை பலத்தை பெறுவதற்கு ஆர்வம் காட்டுவதாக சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் இது வெறும் ஏமாற்றுத்தந்திரமே. 2/3 பெரும்பான்மையை பெறுவாரானால் தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்குமாறும், 2/3 பெரும்பான்மை இருக்கும் அரசாங்கத்திற்கு பாரியளவு சிறுபான்மையினருக்கு உரிமைகளை வழங்கமுடியும் என சர்வதேச நாடுகளால் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவார்.
எனவே வேறொரு கட்சியிலிருந்துகொண்டு தனக்கு தேவையானபோது மாத்திரம் 2/3 பெரும்பான்மையை வழங்கக்கூடிய ஒரு குழுவே அவருக்கு தேவை. இவ்விலக்கும் இத்தேர்தலில் இலகுவாக நிறைவேறும்.
இன்னும் 2/3 பெரும்பான்மைக்காக முயல்வதாக காட்டிக்கொள்வதன்மூலம் பிரதான எதிர்க்கட்சி பலமற்றது என்றும், கடந்த தேர்தலில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் பற்றிய கூப்பாடுகள்; கட்டுக்கதை என்றும் இலகுவாக மக்களை நம்பவைக்க முடிகிறது. அத்துடன் எதிர்க்கட்சிகளை Attacking mode இலிருந்து defense modeக்கும் இது மாறச்செய்துள்ளது.
விருப்பு வாக்கு முறைமையின் கீழ் நடைபெறும் கடைசிதேர்தல் இதுவென்றும் கூறுகிறார். ஆனால் தொகுதிவாரி முறையை அமுல்படுத்துவதன்மூலம் தொகுதிப்பங்கீடு தலையிடியை ஏற்படுத்திக்கொள்ள அவர் முயல மாட்டார் என்றே தோன்றுகிறது.
உங்கள் பிள்ளைகளுக்காக இத்தேர்தலில் வாக்களியுங்கள் என எல்லாமேடையிலும் கூறிவரும் மஹிந்தவின் இன்னொரு கனவான, தனது மகனான நாமல் ராஜபக்சவுக்கு பலமான அடித்தளத்தையும் வெற்றிகரமான் ஆரம்பத்தையும் தரும் திட்டமும் மிக இலகுவாக நிறைவேறப்போகிறது.
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
2 comments:
இந்த சட்ட விரோத என்ற சொற்றொடரைத்தான் சட்டவிரோதமாக்கவேண்டும். இதெல்லாம் part and parcel of lifeஎன்பதுபோல் மக்களாலும் அவர்தம் பிரதிநிதிகளாகப்போகப்போகும் அரசியல்வாதிகளாலும் கருதப்படும் சந்தர்ப்பத்தில் சட்டவிரோதம் என்ற சொல்லுக்கு ஏதாவது அர்த்தம் இருக்க முடியுமா?//
:) ம்ம்
வித்தியாசமானதொரு கோணம்.
உண்மைதான் ஜனாதிபதியை மிஞ்சியதொரு சாணக்கியன் இனிப் பிறந்து வரவேண்டும்.
தன அரசியல் எதிரிகளை வேரோடு சாய்பதிலும் அவர்களது பலத்தை தவிடு பொடியாக்குவதிலும் கட்டம் கட்டி செயல்படுகிறார்.
ஆனால் அவருக்கு 2 /3 பெரும்பான்மை தேவை. தனது பதவிக்காலத்தை நீட்டிக்கும் வகையில் ஆட்சி முறையை மாற்றவும்,சிறு பான்மைக் கட்சிகளை மேலும் சிறு பான்மையாக்கவும்.
இருந்து பாருங்கள்,தேர்தல் முடிவுகள் மேலும் ஆச்சரியப்படுத்தும்
//அந்த அலுவலகத்தை புகைப்படம் எடுத்து உங்களுக்கு காட்ட ஆசைதான். ஆனால் தேசதுரோக குற்றச்சாட்டில் கைதுசெய்து அல்கைதா தொடர்பிருக்கிறதா என்றெல்லாம் தேடவேண்டிய கஷ்டத்தை மிரிஹான பொலிஸுக்கு கொடுக்கும் விருப்பம் இல்லை.//
அப்போ அப்பிடி இல்லையா? ;)
LOSHAN said...
//அப்போ அப்பிடி இல்லையா? ;)//
அடப்பாவி :o
Post a Comment