கடந்த 10 நாட்களாக அமைச்சரவை இன்றி இலங்கை அரசாங்கம் இயங்கிவருகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் புது வருடத்திற்கு முதல் புதிய அமைச்சரவையை நியமித்தபின் தனது சொந்த ஊருக்கு போக இருந்தார். ஆனால் அவரது கட்சியைச்சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நாவலப்பிட்டியவில் இருந்த 34 தொகுதிகளில் எதிர்கட்சியினரை துரத்தியதாக குற்றஞ்சாட்டப்பட திட்டத்தில் மாற்றம் ஏற்படவேண்டியதாகிவிட்டது.
கடந்த மார்ச் 19 ஆம் திகதி கண்டியில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கான முதல் பிரச்சார கூட்டத்தில் அளுத்கமகே ஜனாதிபதியின் கோபத்தை சம்பாதித்துக்கொண்டார். இக்கூட்டத்தில் ஜனாதிபதி அப்போது அமைச்சரவை அமைச்சராக இருந்த சரத் அமுனுகம பற்றி பேசும்போது அளுத்கமவின் ஆதரவாளர்கள் கூச்சலிட்டிருந்தினர். இதனால் கோபமுற்ற ஜனாதிபதி ''நாவலப்பிட்டியவுக்கு போய் கூச்சலிடுங்கள்'' என்று கூறியிருந்தார். நாவலப்பிட்டிய அளுத்கமகேயின் தொகுதியாகும்.
நாவலப்பிட்டிய சம்பவம் தொடர்பான அதிருப்தியையும் கண்டனத்தையும் கெஹலிய ரம்புக்வெல பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். இவர் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளராகவும் இருப்பதால் இது அரசாங்கத்தின் கருத்தாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
இதேவேளை அமுனுகம தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தினார் என கூறும் அளுத்கமகே 500 மில்லியன் நஷ்டைஈடு கோரி கடிதம் அனுப்பியுள்ளார். சாத்தியமே இல்லாத 500 மில்லியனை பெற்றால்கூட இது அளுத்கமகேயின் அரசியல் வாழ்க்கைக்கு ஏற்படுத்திய களங்கத்துக்கு போதாது. அமைச்சரவையில் இவர் இடம்பிடிப்பது சந்தேகமே. பாராளுமன்றத்தில்கூட இவருக்கு கடைசி வரி ஆசனமே ஒதுக்கப்படும் என தெரிகிறது.
ஜானாதிபதி நாவலப்பிட்டிய நிகழ்வுகள் தொடர்பாக கோபத்தில் இருப்பது வெளிப்படையாக தெரிகின்றது. அதனால்தான் பாதுகாப்பு அமைச்சு அந்நிகழ்வுகளை தடுக்காத அப்பிரதேச பொலிஸ் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இது அளுத்கமகேயை திகைப்படையச்செய்துள்ளது. இதுவரை நாவலப்பிட்டிய பொலிஸ் அளுத்கமகேயின் அரசியல் குழுவாகவே செயல்பட்டு வந்துள்ளது. இதன்காரணமாக ஐதேமு இன் வேட்பாளர் அப்துல் காதரின் வாகனம் தாக்கப்பட்டபோது அளுத்கமகே நேரடியாக அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ''அங்கிள் கவலைப்படாதீங்க. நான் அதை சரி செய்து தருகிறேன்'' என்று கூறியிருந்தார்.
நாவலப்பிட்டிய உள்ளடங்கும் கம்பளை பிரதேச SSPக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு வேறொருவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டியவில் 50,948 வாக்குகள் இருக்கின்றன. 12 உறுப்பினர்கள் தெரிவாகும் கண்டியின் ஏனைய 5 தொகுதி முடிவுகளின் அடிப்படையில் ஆளும் ஐமசுமுவின் சார்பாக கெஹலிய ரம்புக்வெல, அளுத்கமகே, டிலும் அமுனுகம, லொஹான் ரத்வத்த, எரிக் வீரவர்தன, எஸ் பி திசாநாயக, பைசர் முஸ்தபா என 7 பேருக்கு வாய்ப்பு கிட்டும். 8ஆவது இடத்தில் மஹிந்த அபயகோன் இருக்கிறார். ஐதேமு இல் ரவூப் ஹக்கீம், லக்ஸ்மன் கிரியல்ல, அப்துல் காதர், ஹலீம், மயந்த திசாநாயக்க ஆகியோருக்கு வாய்ப்பு கிட்டும். 4 பேர் தெரிவானால் மயந்த வாய்ப்பை இழப்பார்.
கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டோரில் ஐமசுமு இல் அமுனுகமவும், ஐதேமு இல் மனோ கணேசனும் தோல்வியடவர்.
திருகோணமலை மாவட்டத்தில் வெறும் 977 வாக்குகளுக்கான தேர்தலே நடைபெற இருப்பதால், அங்கு சம்பந்தன், தௌபீக், சுசந்த புஞ்சி நிலமே, குணவர்தன ஆகியோர் தெரிவு செய்யப்படுவர்.
(பத்திரிகை செய்திகளின் தொகுப்பு)
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment