சென்றவார கடைசிப்பகுதியிலிருந்து, கட்சித்த்தாவல் பற்றி அதிகளவு பேசப்படுகிறது. இதுவரை காலமும் ஒரு அரச ஊடகத்திலேனும் தோன்றியிராத, எந்தவொரு அரசியல் நிகழ்ச்சியிலும் பங்குபற்றியிராத முஸம்மில், இன்று சகல ஊடகங்களின் செய்திகளிலும் முக்கிய இடத்தை வகிக்கிறார்.
(அவர் தனக்கு 300 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டது என்கிறார், அதை ஒரு போதும் நிரூபிக்க முடியாது போகும், அவராகவே தனது மதிப்பை கூட்ட இவ்வாறு சொல்லவும் கூடும் அல்லவா?)
ஒரு ஜனாதிபதித்தேர்தலில் ஒரு சிலர் கட்சி மாறுவது, மாற்றபப்டுவது, வாங்குவது என்பன ஜனாதிபதித்தேர்தலில் மக்களின் முடிவுகளில் எவ்வாறான மாற்றத்தை கொண்டுவரும் என்ற கேள்விக்கப்பாலும்
இன்னும் 3 மாதத்திற்குப்பின் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும்போது 3 மாத காலத்திற்கா இவ்வளவு விலை என்ற கேள்விக்கப்பாலும்
ஜனநாயகத்தின் முக்கிய தூணான பாராளுமன்ற அரசியலில் இது எவ்வாறான பாதகமான் விளைவுகளை நீண்ட கால நோக்கில் ஏற்படுத்தும் என்று ஆராய்வது அவசியமாகிறது.
இலங்கை பாராளுமன்ற அரசியலில் வாக்கு் முதலில் கட்சிக்கும் பின் அக்கட்சியில் உள்ள விருப்பத்திற்குரிய 3 வேட்பாளர்கட்கும் வழங்கப்படுகிறது. இங்கே தனிமனிதனான வேட்பாளர் அன்றி கட்சியே மக்களின் முதல் வாக்கை பெறுகிறது.
இலங்கை ஒரு சிறு தீவாக இருந்தபோதும், பிராந்திய ரீதியாக அரசியல் நோக்குகள் வேறுபடுகின்றன. தென்மாகாணத்தின் அரசியல் சிந்தனைக்கும் வடக்கு அல்லது கிழக்கு மாகாண அரசியல் சிந்தனைக்கும் இடையே பாரிய வேறுபாடு காணப்படுகிறது. தென்மாகாண அரசியல் சிந்தனை உள்ளவர், வடக்கு கிழக்கு மாகாணத்தில் வெற்றி பெறுவது இலகுவானதல்ல. இதன்போது, தான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலுக்கு முன்னிருந்தே தானும் பிராந்திய அரசியல் நோக்குடையவன் என்று காட்டிக்கொள்வதன்மூலம் பிராந்தியக்கட்சிகளினூடாக வாக்குகளைப்பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகுவது இலகுவானதாகும். இதன் பின் மாற்று அரசியல் நோக்குடைய கட்சிக்கு ஆதரவளித்து தன் சுய நலன்களை பூர்த்திசெய்துகொள்ளமுடியும்.
இவ்வாறான தாவல்கள் மூலம் எந்நோக்கத்துக்காக மக்கள் வாக்களித்தனரோ அதற்கெதிராகவே மக்களின் வாக்கு விளைவை ஏற்படுத்தும்.
இவ்வாறானவர்கட்கு அடுத்த தேர்தலில் பாடம் புகட்டலாம் என்றாலும், அதற்கு ஆறு வருடம் காத்திருக்க நேருகிறது. அக்காலப்பகுதியில் மக்களது அரசியல் நோக்கங்கள் பலவீனமாக்கப்படுவது கவனிக்க வேண்டியது.
ஒருவருக்கு தனது கட்சியின் நடவடிக்கைகளில் மாற்ருக்கருத்து இருந்தால் கட்சியை விட்டு ஒதுங்கி அடுத்த தேர்தலில் தன்னை நிரூபித்தே வேறொரு அணிக்கு மாறவேண்டும். அதுவரை தனக்கு ஏலவே இருக்கும் பிரபல்யத்தை பயன்படுத்தி ஊடகங்களூடாக தனது கருத்தை நியாயப்படுத்தமுடியும். மாறாக நொண்டிச்சாட்டுகளை கூறிக்கொண்டு கட்சி தாவுவது மிகப்பெரும் துரோகமாகும்.
இவ்வாறான கட்சித்தாவல்கள் மூலம் வெறுப்படைந்த மக்களே இன்று வாக்களிக்கச்செல்லாமல் வீடுகளில் முடங்குகிறார்கள். அரசியல் ஒரு சாக்கடை என்ற கருத்து வலுப்பெறுகிறது. இதன்மூலம் தகுதியானோர் அரசியலுக்கு வர பயப்படுகின்றனர். நியாயமானோர் கூட துரோகிகளாகிவிடுவார்களோ என்ற சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசிற்கு எல்லா கட்சிகளிலும் இருந்து தாவியோர் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் தேவையான பாதுகாப்பு வசதி, பதவி, சொகுசுகள் என ராஜபோகமாக வாழ்கின்றனர். அவர்கள் பதவி மூலம் பெறும் சம்பளாம். பதவிமூலம் பெறும் லஞ்சம், வீடு வாகன வசதி (வாடகை அல்லது பெறுமதி) பதவி மூலம் செய்யும் வேலைகள் மூலமாக் தனிப்பட்ட ரீதியாக அடையும் பிரபலம், இவர்களுக்கு பாதுக்காப்பு வழங்க ஆகும் செலவு, இவர்களது தனிப்பட்ட ஆளணிக்கு வழங்கப்படும் சம்பளம் என எல்லாவற்றையும் கூட்டிப்பார்த்தால் ஒரு பெரும் தொகை வருகிறது. இது கூட ஒரு லஞ்சமே..
தகுதி உடையோராக இருப்பதனால்தான் அமைச்சுப்பதவி வழங்கப்படுகின்றதென்று வாதிட மாறியவர்கள் அனைவரும் மிலிந்த மொறகொட போல் கல்விரீதியான தகுதியை கொண்டவர்களல்ல
முஸம்மில் என்பவருக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படும் 10இலட்சம் ரூபா ஒரே தடவையாக கொடுக்கப்பட்டது, அமைச்சர்களுக்கு தவணை அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. இதை தவிர வேறு என்ன வித்தியாசம்?
ஆனால் அரச ஊடகங்களில் கட்சி மாறிய ஜோன்ஸ்டனும் கட்சி மாறாத முஸம்மிலும் ஒரே தரத்தில் நோக்கப்படுகிறார்கள். அரசிலிருந்து பொன்சேக்கா அணிக்கு மாறியோர் மட்டும் துரோகிகளாகிறார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்படுகின்றனர் என ஓலமிடும் விமல் வீரவன்ச கூட தன் கட்சி சார்பானவர்கட்கு அமைச்சுப்பதவிகளையும் இன்ன பிற பதவிகளையும் பெற்றவரே. கெஹலிய, ராஜித்த, யாப்பா போன்ற பிரச்சார பீரங்கிகளும் இதே தரத்தில் உள்ளவர்களே.
இச்சந்தர்ப்பத்தை எதிர்க்கட்சிகள் சரியாக சாதுரியமாக பயன்படுத்தவேண்டும். அரச ஊடகங்கள் உருவாக்கியுள்ள கட்சி மாறுதல் தரக்குறைவானதென்ற கருத்தியலை ஆதரிப்பதன்மூலம் கட்சித்தாவுதல் தடைசெய்யப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தமுடியும். நிறைவேற்றதிகாரம் எவ்வாறு கட்சித்தாவலை இலகுவாக்குகிறது என்பதை தெளிவாக்கவேண்டும்.
ஆனால் ஆட்சியை பிடிப்பது மாத்திரம் இலக்கு என்று கருதுவதன் மூலம் எதிர்க்கட்சிகள் இன்று கிடத்துள்ள நல்லதொரு வாய்ப்பை தவற விடக்கூடும்.
மக்களிடமிருந்து அழுத்தங்கள் வராதவரை அரசியல்வாதிகளும் மாறபோவதில்லை...
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment