மன்னார் கோந்தைப் பிட்டியும் கோணலாகும் இன நல்லுறவும் என்ற தலைப்பில் நடராஜா குருபரன் அவர்கள் எழுதிய கட்டுரையின் கடைசியில் சில கேள்விகளை கேட்டிருக்கிறார்.
அந்த கேள்விகளுக்கு என்னாலான பதில்களை அளித்திருக்கிறேன். ஆயினும் இது ஒரு சமூகத்தின் பிரச்சினையாக இருக்கின்றபடியால் இப்பதில்களை என்னும் கூர்மைப்படுத்த நண்பர்கள் உதவமுடியும். (உங்கள் உதவிகள் உங்களின் பெயர்குறிப்பிட்டே வெளியிட தீர்மானித்திருக்கிறேன். )
1) பிரச்சனைக்கு உரிய கோந்தைப்பிட்டி வலைப்பாடு அதாவது வாடிவீடுகள் அமைக்கப்பட்ட காணி கப்பல் கூட்டுத்தாபனத்திற்கு உரியதா இல்லையா?
இலங்கையில எங்காவது மீன்பிடி வாடி தனியார் சொத்தாக இருந்திருக்கிறதா? கடல் ஓரம் அரசாங்கத்துக்குத்தானே சொந்தம்? அவ்வாறான பொதுச்சொத்தான கடற்கரையில்தானே மீனவர்கள் வாடியமைக்கிறார்கள்? அவ்வாறு பயன்படுத்துவதற்குத்தானே அரசாங்கமும் அனுமதியளிக்கிறது?
2) இந்தக் காணியை 2006ல் தற்காலிக பாவனைக்கு என எழுத்து மூல அரசாங்க அனுமதியுடன் கப்பல் கூட்டுத்தாபனம் விடத்தல் தீவு மக்களுக்கு வழங்கிதற்கான ஆதாரம் உள்ளதை எவ்வாறு புரிகிறீர்கள்?
முஸ்லிம்களை விரட்டிவிட்டு விடத்தல்தீவு ஆட்கள் இடம்பிடித்திருக்கிறார்கள். இன்று அதே அரசாங்கம் போகச்சொன்னால் மட்டும் கசக்கிறதா?
3) விடுதலைப் புலிகளின் காலத்தில் அமுதன் முஸ்லீம்களுடன் செய்து கொண்ட உடன்பாட்டில் இந்தப் பகுதி அவர்களுடையது என கூறியதனை ஏற்றுக் கொண்டால் புலிகள் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் அல்லது உடன்பாடுகள் சட்ட அந்தஸ்த்து உடையவை என்று பொருள்படும் …ஏற்றுக் கொள்கிறீர்களா?
உடன்பாட்டுக்கும் நடவடிக்கைக்கும் வித்தியாசம் இருப்பது தெரியாதா? உடன்பாடு எந்த நெருக்குதல்களும் இன்றி எட்டப்பட்டிருந்தால் மதித்துத்தானே ஆகவேண்டும்?
4) அரசாங்கத்தின் கப்பற் கூட்டுத் தாபனக் காணியை புலிகள் உங்களுக்கு உரியது எனக் கூறியதற்கு சட்ட அந்தஸ்த்து கொடுக்கப் போகிறீர்களா? அரசாங்க அதிகாரிகள் குறிப்பாக அப்போது கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் இருந்த அஸங்க அபயகுணசேகர கொடுத்த அத்தாட்சிக் கடிதத்திற்கு சட்ட அந்தஸ்த்து கொடுக்கப் போகிறீர்களா?
மேலே உள்ள பதில்களை மீள வாசிக்கவும்
5) இந்தக் காணியின் பயன்பாட்டுக்கு உரிய அனுமதிப் பத்திரத்தை வைத்திருந்தும் 3 வாரத்தில் தமக்குரிய இடம் ஒதுக்கப்பட்ட பின் அங்கிருந்து வெளியேற முடியும் என நீதிமன்றிடமும் அரசாங்க அதிகாரிகளிடமும் விடத்தல் தீவு மக்கள் வாக்குறுதியை வழங்கியபின்னும் அவர்களது வாடி வீடுகளை அடித்து உடைத்து அவர்களின் வணக்க சொரூபங்களை சிதைத்து கடலில் போட்டது சரியென வாதிடுகிறீர்களா?
தற்காலிகமாக தங்க வந்தவர்கள் முஸ்லிம்கள் மீளக்குடியேறியது முதல் வாக்குறுதியை காப்பாற்றாத நிலையில் குருபரன் எந்த அடிப்படையில் நம்பவேண்டும் என்கிறார்?
6) கடற்தொழிலையே நம்பி இருக்கும் அந்த மக்களுக்கு அமைச்சர் என்ற வகையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மாற்று ஏற்பாட்டை ரிஸாத் பதியுதீன் மேற்கொள்ளாதது இனவாதம் அல்லது தவறு இதில் எது சரி?
ஒரு இடத்தில் தீப்பற்றினால் பக்கத்தில் ஒரு வீட்டை கட்டிவிட்டுத்தான் தீயை அணைக்க முயல்வாரா குருபரன்?
7) தேசிய நூதனசாலைக் காணியை தனது நேரடி உத்தரவில் உடனடியாகப் பெற்று உங்களைக் கோந்தைப்பிட்டியில் குடியமர்த்த முடிந்த அமைச்சருக்கு விடத்தல் தீவு மக்களுக்கு உரிய மாற்று ஏற்பாட்டை உடன் ஏன் செய்யமுடியவில்லை?
முஸ்லிம்களை குடியமர்த்த அவர்செய்த முயற்சிகள்தான் குருபரனுக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன்மீது குரோதம் கொள்ள காரணம் என்பது இக்கேள்வியினால் ஊர்ஜிதமாகுகிறது
8) தமிழர் அல்லாத நீதிபதி ஒருவரைக் கழுதை மற்றும் நாயின் படங்களில் அவர் பெயரைப்போட்டு அவரது பெயரைச் சொல்லி நாயே வெளியில் வா என்று கூறி நீதிமன்றத்தையும் தாக்கி இருந்தால் இப்போ நிலமை என்னவாகி இருக்கும்?
நீதிபதியொருவை அதன் வளாகத்தில் வைத்து கொன்ற ஒருவனுக்கே சட்டப்படிதான் தண்டனை வளங்கப்பட்டுள்ளது. மாறாக சுடுவதற்கான ஆணை வழங்கப்படவில்லை என்பது இவ்வளவு காலம் ஊடகத்தில் வேலை செய்த குருபரனுக்கு தெரியாதா?
9) மன்னார் சம்பவம் நடைபெற்ற போது 45 நிமிடங்களுக்கு மேலாக பதியப்பட்ட வீடியோக காட்சியை தணிக்கை இன்றி முழுமையாக மக்கள் முன் ஒளிபரப்புவீர்களா?
தணிக்கை இன்றி நீங்கள் யூடியூப்பில் பதிவேற்றலாமே. ஏன் செய்யவில்லை?
10) மன்னாரில் நடந்த நடக்கின்ற அடாவடித் தனங்கள் குறித்து இன, மத, மொழி, மற்றும் பதவி நிலைகளின் பாதிப்பின்றிய அரசியல் தலையீடு இன்றிய, படையினரின் ஆட்சியாளரின் மிரட்டல்கள் இன்றிய ஒரு சுயாதீன விசாரணைக்கு உத்தரவிட உங்களுக்கு முடியுமா?
அறிவு சீவி சார், இதைவிட நாட்டில் சகல பிரச்சினைக்கும் தீர்வுகண்டு அதன்பின் மன்னார் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்கிறீர்களா?
மேலே குருபரனை நோக்கிய கேள்விகளுக்கு அவர் பதில் பின்னூட்டத்தில் அளிக்கமுடியும்.
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment