இலங்கையிலேயே அதி சூடான தேர்தல் களமாக கிழக்கு மாகாணத்தை அப்பிரதேச மக்கள் சொல்வர். ஏட்டிக்கு போட்டியான பிரச்சாரங்களும் கைகலப்புகளும் இங்கு சகஜம்! அதேவேளை அரசியல் ரீதியாக பாமரனுக்கும் மிகப்பெரும் புரிதல் உண்டு. இனி இப்பிரதேச அரசியல் கள நிலவரம் பற்றி கொஞ்சம் பேசுவோம்.
அண்மைக்காலமாக அரச ஆதரவு சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகின்றமை பற்றி முஸ்லிம்கள் மிகுந்த விசனத்தில் இருக்கிறார்கள். இதுவே இன்று முகா அலையொன்றை இங்கு ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் வெண்ணெய் திரளும்போது தாளியை உடைத்த கதையாக ஹக்கீம் மகா சங்கத்திடமும் ஜாதிக ஹெல உறுமயவிடமும் மன்னிப்பு கேட்ட சம்பவம் ஆகியிருக்கிறது. உன்னிச்சை சம்பவம் சிலவேளை மீண்டும் அலையை எழுச்சி கொள்ள செய்யவும் வாய்ப்பிருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அசாத் சாலி
கொழும்பு மாநகரசபை உறுப்பினரான அசாத் சாலி அவர்கள் இம்முறை மட்டக்களப்பில் போட்டியிடுகிறார். முஸ்லிம்களின் விடயத்தில் அக்கறை கொண்டவராயினும் இவரது அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டிவிடும் தன்மை ஒரு பலவீனமாகும். முகாவின் வேட்புமனுவில் கைச்சாத்திட ஓரிரு நாட்களின் முன்பு முகா தலைமை ஐக்கியத்தில் ஆர்வம் காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டினார். அதற்குமுன் முகா பிரமுகர்களை சாடிக்கொண்டிருந்தார். இவையாவும் முகா ஆதரவாளர்களின் வாக்குகளையேனும் இவருக்கு பெற்றுதருவதில் இடைஞ்சலாக இருக்கும்.
இன்னும் இவர் கொழும்பை சேர்ந்தவர் என்பதால் கிழக்கு முஸ்லிம்களின் நிஜ பிரச்சினைகள் அவற்றின் பாரதூரம் பற்றிய புரிதல்கள் குறைவு. இதே காரணத்தால் பல பெரும் தலைகள் முன்னொரு காலத்தில் கிழக்கில் போட்டியிட்டு தோல்வியடைந்த வரலாறும் இருக்கிறது.
இவற்றையெல்லாம் சேர்த்து கணக்கொட்டால் முகா தலைமை அசாத் சாலியின் வாய்க்கொழுப்பை அடக்குவதற்காக வாய்ப்பு குறைந்த மட்டக்களப்பில் களமிறக்கியுமிருக்கலாம் என்று கருத இடமுண்டு.
அக்கரைப்பற்று
முகாவுக்கு திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 5 அல்லது 4 வேட்பாளர்களையே வெற்றி பெறச்செய்ய முடியும். இன்று அக்கரைப்பற்று அரசியல் களத்தில் நிலமை முகாவுக்கு முன்னேற்றகரமானது. பணபலம் மிக்க 2 வேட்பாளர்களையும் ஆட்பலம் கொண்ட ஒரு வேட்பாளரையும் அதாவுல்லாவின் மண்ணில் அவருக்கெதிராக அவரது மண்ணைச்சேர்ந்த மூவரை களத்தில் இறக்கிவிட்டுள்ளது. ஆனால் அதாவுல்லாவோ அப்பிரதேசத்தில் எவரையும் களமிறக்காது தனிப்பட்டரீதியான செல்வாக்கை மோதவிட்டுள்ளார். அதனால் அதாவுல்லாவின்கட்சிக்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்காவிட்டால் அது அவரது அரசியல் அஸ்த்தமனமாக இருக்கக்கூடும். அவ்வாறில்லாமல் அவர் வென்றால்கூட முகாவுக்கு பெருத்த சேதாரம் ஏற்பாடாது! அது எப்போதும்போல் முகா அகக்ரைப்பற்றில் தலை தூக்க முடியாமல் இருக்கிறது என்றமட்டிலுமே கணக்கிலெடுக்கப்படும்.
கறுப்பு ஆடு
அதேவேளை சாய்ந்தமருதில் முகா பிரமுகர்களிடையேயான பகை முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. ஆனால் அண்மைக்காலமாக முகா தலைவரின் பேச்சுக்கள் ஹரீஸுடனான உறவுகள் சீராகத்தான் இருக்கின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.
அதேவேளை நிசாம் காரியப்பரும் வெளிப்படையாகவே தலைமைத்துவத்தை குற்றம் சாட்டிக்கொண்டிருந்தார். இன்று அவர் அமைதியாக இருந்ட்தாலும் உள்ளுக்கும் தணல் இருக்ககூடும். இதுவும் ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.
தோல்விகளின் நாயகன்
முகா வின் பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத் மீது கட்சி ஆதராவளர்களிடையே காட்டமான விமர்சனம் இருக்கிறது. இவர் தனது சொந்த ஊரில் கட்சியை வெல்லவைக்கமுடியாமல் கஷ்ட்டப்படுகிறார். தொடர்ந்து மக்கள் ஆதரவில் மிகப்பலவீனமான நிலையிலேயே அவர் இருக்கிறார். இம்முறை முன்னேற்ற அறிகுறி எதையும் காணோம்!
தொடரும்
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment