வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி மக்கள் வாக்களிக்க இருக்கும் எஞ்சியுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் கொழும்பு மாநகரசபை தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது. தொடர்ந்து ஐதேகவின் கோட்டையாக இருக்கும் நிலையில் சிறுபான்மை இன மக்களினதும் படித்த மக்களினதும் வாக்குகள் எதையாவது செய்யக்கூடிய களமும் இதுதான்.
இம்முக்கிய தேர்தல் பற்றிய என்னுடைய கோணத்திலான அவதானிப்பை இப்பதிவினூடாக உங்களுடன் பகிர விளைகின்றேன்.
தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கிடையே மட்டும் ஆட்சிக்கான போட்டி நிலவுகிறது. முஸம்மிலை களமிறக்கியிருக்கும் ஐதேக மற்றும் மிலிந்த மொரகொடவை களமிறக்கியிருக்கும் ஐமசுமு என்பனவே அக்கட்சிகள்
இவ்விரு வேட்பாளர்களை மட்டும் தனித்து நோக்கினால் மிலிந்த; முஸம்மிலை விடவும் பெறுமதியான தேர்வு. அவர் கனவான் அரசியலை செய்துகொண்டிருப்பவர். புதியதொரு அரசியல் கலாச்சாரத்தை சொல்லி இன்றுவரையும் கடைப்பிடிப்பவர். போஸ்ட்டர் ஒட்டாத இவரின் அரசியல் பாணி எனக்கு விருப்பமானதொன்று. இவ்வாறான ஒப்பீட்டில் முஸம்மிலை பற்றி பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை.
ஊடகங்கள்
தேர்தலில் வெற்றி பெறப்போகும் அணி எது என்பது ஊடகங்களுக்கு தெரியாத விடயமல்ல. ஆனால் வர்த்தக ரீதியான நோக்குகளைக்கொண்ட இவ்வூடகங்கள் களம் சூடாக இருப்பதாக காட்டிக்கொள்வதன்மூலம் மட்டுமே விளம்பரஞ்செய்வதற்கு வேட்பாளர்களை ஊக்குவிக்க முடியும். இதன் அடிப்படையில் இத்தேர்தலில் மட்டுமல்ல சகல தேர்தல்களிலும் கள நிலவரங்கள் தொடர்பான ஊடக சித்தரிப்புகளை நாம் கணக்கில் எடுக்க முடியாது.
தீர்மானிப்பது யார்
கொழும்பு மூவின மக்களையும் கொண்டது. ஆயினும் தமிழர் தரப்பு தேர்தல் மூலமான அரசியலில் ஆர்வமற்றது. அச்சமூகத்தில் பாதிப்பேராவது வாக்களிக்க போவதில்லை. இதைப்பற்றி கடந்த பாராளுமன்ற தேர்தலின்பின் மனோ கணேசனே மஹாராஜ ஊடகமொன்றில் அங்கலாய்த்திருந்தார். (யாரேனும் அந்நிகழ்ச்சியின் linkஐ பகிரமுடியுமானால் சேர்த்துக்கொள்கிறேன்.)
மீதி தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளைவிட மிக வித்தியாசமானது. இவர்கள் எப்போதும் கொழும்பிற்கேயுரிய அரசியல் இலக்குகளைக்கொண்டவர்கள். இவர்களில் குறிப்பிடத்தக்க பங்கினர் மனோ கணேசனை ஆதரிப்பர்.
சிங்கள, முஸ்லிம் சமூகத்தில் கொழும்பிற்கேயுரிய மேல்தட்டு வர்த்தக வட்டமும் பாதியளவே வாக்களிக்கச்செல்ல மீதிப்பேர் அந்நாளில் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் சுற்றுலாச்செய்துகொண்டிருப்பர். இவர்களைப்பொறுத்த வரையில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ஒன்றுதான். அல்லது முடிவு தெரிந்த தேர்தலில் அவர்களது வாக்கு எந்தவொரு மாற்றத்தையும் செய்யாது.
இத்தேர்தலில் பெருவாரியாக தாக்கம் செலுத்தப்போவது பொருளாதார மட்டத்தில் கீழ்நிலையில் இருக்கும் அன்றாடங்காய்ச்சிகள்தான்.
தீர்மானிக்கப்போகும் விடயம்
இந்த பாமர வறிய மக்களுக்கு முன் உள்ள முதற் பயம் தமது இருப்பிடம் பறிபோய்விடுமோ என்பதே. அண்மைக்கால இடிப்பு நடவடிக்கைகளை இவர்கள் மறந்துவிடவில்லை. ஏதோ ஒருவகையில் இவர்களது உறவினர்களோ நண்பர்களோதான் அதில் பாதிக்கப்பட்டுமுள்ளார்கள். இவர்களது வதிவிடப்பிரச்சினை தொடர்பாக நான் ஏற்கெனவேசட்டவிரோத கட்டடங்கள் - யதார்த்தமான தீர்வு என்ற பதிவில் சொன்ன கருத்துக்களை நான் மாற்றவில்லையாயினும் தனது அன்றாடப்பிரச்சினையோடு உழலும் இவர்கள் நிச்சயமாக அந்த தீர்வை ஏற்கப்போவதில்லை.
அரசு தரப்பு இப்போது சொல்லும் எந்த வாக்குறுதியையும் இவர்கள் நம்பத்தயாராக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. போதாக்குறைக்கு ஏனைய கட்சிகள் பீதியை நன்றாக வளர்த்து விட்டிருப்பதும் அரசு தரப்பின் மேயர் வேட்பாளாரான மிலிந்த மொரகொட இம்மக்களால் அந்நியமானவராக, அமெரிக்க ஏஜன்டாகவே பார்க்கப்படுவதும் இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம்.
ஐதேகவை தெரிவு செய்வது பிரச்சினையை தீர்க்குமா?
இந்தக்கேள்விக்கு பதில் இல்லை என்பதே. தேசிய ரீதியான அபிவிருத்தி திட்டங்களுக்கு குறுக்கே மாநகரசபை வந்து எதையும் சாதிக்கப்போவதில்லை. அதிகப்பிரசங்கித்தனமான எந்தவொரு நடவடிக்கையும் மாநகரசபை கலைக்கப்பட்டு ஆணையாளர் ஆட்சிக்கு வழிவகுக்கும். எனவே இவ்வளவு செலவு செய்யப்பட்டு நடத்தப்படும் இத்தேர்தல் களத்தின் முடிவு எவ்வாறு இருந்தாலும் லகான் எப்படியோ அரசாங்கத்தின் கைகளுக்கே போய்விடும். எத்தனை மாதங்களுக்குள் போகும் என்று வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.
இதைப்புரிந்துகொண்ட ஐதேக ஆதரவாளர்கள் வாக்களிக்கச்செல்லப்போவதில்லை. இது ஐதேகவின் வாக்குகளை கட்டாயம் பாதிக்கும்.
சிறுபான்மைக்கட்சிகளின் நிலை
இட்தேர்தலில் சிறுபான்மை மக்களின் இரண்டு கட்சிகள் போட்டியில் உள்ளன. இரு கட்சிகளுக்கும் தமது வழமையான வாக்கு வங்கிக்கு வெளியே வாக்குகள் கிடைப்பதென்பது சாத்தியமற்றது. இன்னும் இக்கட்சிகளுக்கு வாக்களிப்பவர்கள் ஐமசுமு வெற்றிபெறுவதை விரும்பமாட்டார்கள். இந்நிலையில் இக்கட்சிகளுக்கு வாக்களிப்பது ஐமசுமுவுக்கே வசதியாக அமையும் என்பதை புரிந்த; தமது வதிவிடப்பிரச்சினையை முன்னிலைப்படுத்திய வாக்காளர்கள் தமது கட்சிய விடுத்து ஐதேகவுக்கே வாக்களிப்பார்கள் என நம்புகிறேன்.
மனோ கணேசன்
இவரது தனிப்பட்ட செல்வாக்கின்மீது மட்டுமே கட்சி தங்கியிருப்பதால் இவரது கட்சியில் போட்டியிடும் ஏனையவர்கள் வாக்குகளை சேகரித்துக்கொடுக்கப்போவதில்லை. அதேவேளை இவரது சகோதரர் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது வாக்கு வங்கியை கட்டாயம் பாதிக்கும். அவர் தனது சகோதரனுக்கு வாக்களிக்க கோருவது அதைவிட அதிகமாகவே மனோ கணசனுக்கான வாக்குகளில் வீழ்ச்சிய ஏற்படுத்தும்.
முகா
முஸ்லிம் காங்கிரஸ் இத்தேர்தலில் தனித்துப்போட்டியிடுவது பலத்த விமர்சனங்களை எதிர்கொண்ட விடயம். தனித்துப்போட்டியிடுவது ஐமசுமுவின் வெற்றியையே உறுதி செய்யும் என்றாலும் முகாவுக்கு இருந்த ஒரே தெரிவு தனித்துப்போட்டியிடுவதே.
ஐமசுமுவுடன் சேர்ந்து போட்டியிட்டிருந்தால் முகாவின் வாக்காளர்களில் கணிசமானோர் வாக்களிக்கச்செல்லமாட்டார்கள் என்பதும் அரசுடன் கூட்டுச்சேர்ந்துள்ள இந்நேரத்தில் ஐதேகவுடன் கூட்டுக்கு இடமே இல்லை என்பதும் முக்கிய காரணிகளாக இருந்திருக்க கூடும்.
போட்டியிடுபவர்கள் இனி செய்யக்கூடியது
ஐதேக
முகாவையும் மனோ கணேசனையும் இத்தேர்தலில் தீவிரம் காட்டாமலிருக்கச்செய்யலாம்.
ஐமசுமு
இரு சிறுபான்மை கட்சிகளுக்கும் பணத்தை தாராளமாக அள்ளி வழங்கி ஐதேகவின் வாக்குகளை இவர்களை நோக்கி திருப்பதற்கான் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த முயற்சிக்கலாம்.
சிறுபான்மை கட்சிகள்
தமது ஆதரவாளர்களை வாக்களிக்க செல்ல தூண்டுவதே முதற்கடன்.
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment